Add parallel Print Page Options

மாற்றப்பட்ட வாழ்க்கை

கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான். தேவன் விரும்புகிறவற்றைச் செய்யும் மனிதர்கள் செய்ய விரும்புகிறவற்றை இனிமேலும் செய்யாமல் இருக்கவும் உங்கள் உலக வாழ்வின் மீதியான காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல், தீயவிருப்பங்கள், குடிப்பழக்கம், மது அருந்தும் விருந்துகள், தடைசெய்யப்பட்ட உருவ வழிபாடு ஆகிய நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்வதில் ஏற்கெனவே உங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.

இந்தக் குரூரமும் பாவமும் நிறைந்த வாழ்க்கை முறையில் நீங்கள் ஈடுபடாததை அந்த நம்பிக்கையற்றோர் விநோதமாகக் கருதுகிறார்கள். உங்களைக் குறித்து மோசமான முறையில் பேசுகிறார்கள். வாழ்கிறவர்களையும் இறந்துபோனவர்களையும் நியாயம் தீர்க்கத் தயாராய் இருக்கிற ஒருவருக்கு செய்த காரியங்களுக்கு அவர்கள் விளக்கமளிக்கவேண்டும். இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

தேவனுடைய வரங்கள்

எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். 10 உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். 11 பேசுகிற மனிதன் தேவனிடமிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவதுபோல பேசவேண்டும். சேவை செய்யும் மனிதன் தேவன் தரும் வல்லமையோடு சேவை புரிதல் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும்.

கிறிஸ்தவனாகத் துன்புறுதல்

12 எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். 13 கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். 14 நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், மக்கள் உங்களைப் பற்றிப் தீயன கூறும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனுடைய மகிமைமிக்க ஆவியானவர் உங்களோடிருப்பதால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 15 உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது. 16 ஒருவன் கிறிஸ்துவுக்காகத் துன்புறுவதற்காக வெட்கப்படக்கூடாது. அப்பெயருக்காக நீங்கள் தேவனை வாழ்த்தவேண்டும். 17 நியாயந்தீர்க்கப்படுதல் ஆரம்பமாகும் காலம் இது. தேவனுடைய குடும்பத்தில் அந்நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் ஆரம்பித்தால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு என்ன நிகழும்?

18 “ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும்,
    பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?” (A)

19 தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.