Add parallel Print Page Options

15 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும். கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” [a] என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது. வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:

“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
    உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.” (A)

10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” (B)

11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
    அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.” (C)

12 ஏசாயா இப்படி கூறுகிறார்:

“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
    யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
    அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.” (D)

13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.

தன் பணியைப் பற்றிப் பவுல்

14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.

17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,

21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
    அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” (E)

என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

ரோம் செல்லப் பவுலின் திட்டம்

22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.

23 நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். 24 நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம்.

25 தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன். 26 எருசலேமிலுள்ள தேவனுடைய மக்களில் சிலர் வறுமையில் உள்ளனர். மக்கதோனியா, அகாயா போன்ற நாடுகளில் உள்ள விசுவாசிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களே எருசலேமில் உள்ள விசுவாசிகளுக்கு உதவிசெய்து வருகின்றனர். 27 இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே. 28 எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன்.

வழியில் உங்களைப் பார்ப்பேன். 29 நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன்.

30 சகோதர சகோதரிகளே! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் அன்பின் மூலமும் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது எனது போராட்டங்களில் பங்கு கொள்ளுங்கள். தேவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நினைவு கொள்ளுங்கள். 31 யூதேயாவிலுள்ள நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பிரார்த்தனை செய்யுங்கள். எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு நான் செய்யப்போகும் உதவி அவர்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படவும் பிரார்த்தனை செய்யுங்கள். 32 பிறகு, தேவனுடைய விருப்பம் இருந்தால் நான் உங்களிடம் வருவேன். நான் மகிழ்ச்சியோடு வருவேன். உங்களோடு ஓய்வுகொள்ளுவேன். 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்.

Footnotes

  1. ரோமர் 15:3 சங். 69:9-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.