Add parallel Print Page Options

ஏழு சீஷர்களுக்கு இயேசு காட்சி அளித்தல்

21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.

அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.

எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. 10 இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

11 சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. 12 இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். 13 இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.

14 அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார்.

பேதுருவிடம் இயேசு பேசுதல்

15 உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.

பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் [a] கவனித்துக்கொள்” என்றார்.

16 மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

“ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான்.

பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார்.

17 மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் மகனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். 18 நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். 19 (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.

20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) 21 பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.

22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.

23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.

24 அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.

25 இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.

Footnotes

  1. யோவான் 21:15 ஆட்டுக்குட்டிகள் மந்தை இயேசு தனது சீஷர்களைக் குறிக்க இச்சொற்களைப் பயன்படுத்தினார். யோவான் 10.