Add parallel Print Page Options

சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்

மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.

கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான்.

அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார்.

சாத்தான், “தோலுக்குத் தோல்! [a] என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான்.

அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார்.

பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.

யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள்.

10 பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்

11 தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்).

12 ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

13 பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.

Footnotes

  1. யோபு 2:4 தோலுக்குத் தோல் இதற்கு ஒருவன் வலியைத் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்வான் எனப்பொருள்படும்.