Add parallel Print Page Options

தேவன் தன் குமாரன் மூலமாகப் பேசியிருக்கிறார்

கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார்.

கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை,

“நீர் எனது குமாரன்,
    இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.” (A)

அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை,

“நான் அவரது பிதாவாக இருப்பேன்.
    அவர் எனது குமாரனாக இருப்பார்.” (B)

மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது,

“தேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்” (C)

என்று கூறினார்.

தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது,

“தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு
    ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” (D)

எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது,

“தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது.
    சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்.
நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர்.
    ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக்
    கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.” (E)

10 மேலும் தேவன்,

“கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர்.
    மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன.
11 இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர்.
    ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.
12 நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர்.
    அவை ஓர் ஆடையைப் போன்று மாறும்.
ஆனால் நீரோ மாறவேமாட்டீர்.
    உமது ஜீவன் ஒருபோதும் அழியாது” (F)

என்றும் கூறுகிறார்.

13 தேவன் எந்த தேவ தூதனிடமும்,

“உமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை
    எனது வலது பக்கத்தில் உட்காரும்” (G)

என்று என்றைக்கும் சொன்னதில்லை.

14 தேவதூதர்கள் எல்லாரும், தேவனுக்கு சேவை செய்துகொண்டிருக்கிற ஆவிகள் ஆவார்கள். இரட்சிப்பைப் பெறப் போகிறவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.