Add parallel Print Page Options

குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல்

17 “குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்!

விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும்.

சிக்கலான நீதிமன்ற முடிவுகள்

“உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். 10 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. 11 நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!

12 “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். 13 இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள்.

இராஜாவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது. 16 அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். 17 மேலும், அரசன் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனை கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த அரசன் அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது.

18 “அரசன் தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 19 அரசன் அந்த புத்தகத்தை தன்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்தறிய வேண்டும். ஏனென்றால், அவனது தேவனாகிய கர்த்தருக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிலுள்ள எல்லா சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் அரசன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 20 அரசன் தன் சகோதரர்களாகிய ஜனங்களைவிட தான் மேன்மையானவன் என்று எண்ணிவிடக் கூடாது. மேலும் அவன் ஒரு போதும் இந்த சட்டங்களிலிருந்து விலகிவிடக்கூடாது. ஆனால் அவன் இவற்றைச் சரியானபடி முழுமையாகப் பின்பற்றினால், பின் அந்த அரசனும் அவன் சந்ததியினரும் நீண்ட காலம் இஸ்ரவேல் நாட்டை ஆளலாம்.