Add parallel Print Page Options

வெட்டுக்கிளிகளின் தரிசனம்

கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார். வெட்டுக்கிளிகள் நாட்டிலுள்ள புல் அனைத்தையும் தின்றன. அதற்குப் பிறகு நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உம்மைக் கெஞ்சுகிறேன். எங்களை மன்னியும்! யாக்கோபு உயிர்ப்பிழைக்க முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்று சொன்னேன்.

பிறகு கர்த்தர் இதைப்பற்றி அவரது மனதை மாற்றினார். கர்த்தர், “அந்த காரியம் நடைபெறாது” என்றார்.

நெருப்பின் தரிசனம்

எனது கர்த்தராகிய ஆண்டவரே, என்னிடம் இவற்றைக் காட்டினார். நான் அக்கினியாலே நியாயத்தீர்ப்புக்காகக் கூப்பிடுகிற தேவனாகிய கர்த்தரை பார்த்தேன். நெருப்பு பெரிய ஆழியை அழித்தது. நெருப்பு நாட்டை அழிக்கத் தொடங்கியது. ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன்.

பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், “அந்தக் காரியம் நடைபெறாது” என்றார்.

தூக்குநூலின் தரிசனம்

கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது) கர்த்தர், “ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்.

நான், “ஒரு தூக்கு நூல்” என்றேன்.

பிறகு என் ஆண்டவர், “பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது ‘கோணல் தன்மை’ இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன். ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக் கொல்வேன்” என்றார்.

அமத்சியா, ஆமோசைத் தடுக்க முயல்கிறான்

10 பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா இஸ்ரவேலின் அரசனான யெரோபெயாமுக்கு இச்செய்தியை அனுப்பினான். “ஆமோஸ் உனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகிறான். அவன், இஸ்ரவேல் உனக்கு எதிராகப் போராட முயற்சி செய்கிறான். இந்த நாடு அவனது வார்த்தைகளையெல்லாம் சகித்துக்கொள்ளாது. 11 ஆமோஸ், ‘யெரொபெயாம் வாளால் கொல்லப்படுவான். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச் செல்வார்கள்’” என்று சொல்லியிருக்கிறான்.

12 அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். 13 ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!”

14 பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். 15 நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார். 16 எனவே கர்த்தருடைய செய்தியைக் கேள், ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம். ஈசாக்கின் குடும்பத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாதே’ என்று நீ சொல்கிறாய். 17 ஆனால் கர்த்தர் கூறுகிறார்: ‘உன் மனைவி நகரத்தில் விபச்சாரி ஆவாள். உனது மகன்களும் மகள்களும் வாளால் கொல்லப்படுவார்கள். மற்ற ஜனங்கள் உனது நாட்டை எடுத்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். நீ அயல் நாட்டில் மரணமடைவாய். இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாக இந்த நாட்டை விட்டுச் சிறையெடுக்கப்படுவார்கள்.’”